பூட்டிய வீட்டில் பெண் உடல்.. கொலையா, தற்கொலையா என போலீஸ் விசாரணை..!
பூட்டிய வீட்டில் பெண் உடல்.. கொலையா, தற்கொலையா என போலீஸ் விசாரணை..!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே இந்தலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (32). இவருடைய மனைவி வைத்தீஸ்வரி. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்த அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந்த தம்பதியினர், தங்கள் வீட்டின் மேல் மாடியில் கொட்டகை அமைத்து வசித்து வந்தனர். கீழ் வீட்டில் சிலம்பரசனின் பெற்றோர் வசித்து வந்தனர்.
சில தினங்களுக்கு முன்னர் சிலம்பரசன் வெளியூர் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. நேற்று, சிலம்பரசன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் அச்சிறுப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, வைத்தீஸ்வரியின் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. அவருடைய உடல் அருகே, வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்து பாட்டிலும் கிடந்துள்ளது.
இதனால் அவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வைத்தீஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
குழந்தை இல்லாத ஏக்கத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதாவது பிரச்னையா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.