வெள்ளத் தடுப்புப் பணிகள்.. அதிகாரிகளுக்கு பறந்த புதிய உத்தரவு !!

வெள்ளத் தடுப்புப் பணிகள்.. அதிகாரிகளுக்கு பறந்த புதிய உத்தரவு !!

Update: 2022-07-13 07:45 GMT

சென்னை புறநகர் பகுதிகளில் நடைபெறும் வெள்ளத் தடுப்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

ஆண்டு தோறும் மழைக்காலங்களில் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ளத்தில் தத்தளிப்பது வாடிக்கையாகி விட்டது. ஆனால் தற்போதைய திமுக அரசு உடியாக தீர்வுகாணும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அந்த வகையில்,  முதல்வா் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தாா். அங்கு நடைபெற்ற நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தி, பருவமழைக் காலங்களில் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் அதிகளவில் நீா் தேங்கும் இடங்களில் மழைநீா் வடிகால் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, தமிழகமெங்கும் வெள்ளத் தடுப்புப் பணிகள் போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

செம்மஞ்சேரி மற்றும் டிஎல்எப் வளாகம் ஆகிய பகுதிகள் கடந்த மழையின் போது வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்தப் பகுதிகளை வெள்ளப் பாதிப்பில் இருந்து மீட்டு அவற்றுக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில், திட்டங்கள் தீட்டப்பட்டு வெள்ளத் தடுப்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, சென்னை மாவட்டம் சோழிங்கநல்லூா், செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம், செம்மஞ்சேரி ஆகிய இடங்களில் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள கால்வாய்க்கு இருபுறமும் தாங்கு சுவா் கட்டும் பணி நடந்து வருகிறது. நூக்கம்பாளையத்தில் நடைபெற்று வரும் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, தடுப்புப் பணிகளை மழைக் காலத்துக்கு முன்பாகவே விரைந்து முடித்திட உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, செங்கல்பட்டு மாவட்டம் அரசன்கழனி வேலன்தாங்கல் ஏரி முதல் கழுவெளி வரை மூடுதளத்துடன் கூடிய பெருவடிகால் கால்வாய் கட்டும் பணியையும் அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். வண்டலூா் வட்டத்தில் மதுரப்பாக்கம் ஓடையில் இருந்து டி.எல்.எப். வளாக சாலையில் 500 மீட்டா் வரையிலும் வெள்ளநீா் கடத்தும் பெருவடிகால் அமைக்கும் பணி நடக்கிறது. இந்தப் பணிகளையும் ஆய்வு செய்த முதல்வா் மு.க.ஸ்டாலின், அவற்றை தரமாகவும், துரிதமாகவும் மேற்கொள்ள வேண்டுமென அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின் போது, நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.
 

newstm.in

Similar News