மின் கட்டணம் செலுத்தக்கோரி மோசடி.. லிங்க்-ஐ கிளிக் செய்ததும் பறிபோன ரூ.8 லட்சம் !

மின் கட்டணம் செலுத்தக்கோரி மோசடி.. லிங்க்-ஐ கிளிக் செய்ததும் பறிபோன ரூ.8 லட்சம் !

Update: 2022-07-01 18:15 GMT

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் 83 வயதான முதியவர் நடராஜன். இவர் தனியாக செல்போன் பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில், இவரது செல்போனுக்கு கடந்த மாதம் 7 ஆம் தேதி, புதிதாக ஒரு எண்ணிலிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்தது.

அதில், அவரது வீட்டிற்கான மின் கட்டணம் செலுத்தவில்லை எனவும், அதனால் வீட்டின் மின் இணைப்பு இரவுக்குள் துண்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனுடன், ஒரு லிங்க்-ம் இணைக்கப்பட்டிருந்தது. அதில் பணத்தை கட்டினால் மின்இணைப்பு துண்டிக்கப்படாது என்றும் குறிப்பிட்டிருந்தது. 

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த முதியவர் நடராஜன், தனது வீட்டின் மின் துண்டிக்கப்படுமோ என்ற அச்சத்தில் உடனே அந்த லிங்கை கிளிக் செய்துள்ளார். இதையடுத்து வங்கி விவரங்கள் கேட்கவே வெறும் ரூ.10 அதில் பதிவிட்டு அனுப்பியுள்ளார். இங்கு தான் அத்தனை பிரச்சனையும் இருந்துள்ளது.

பின்னர் ஒருநாள் பணம் எடுப்பதற்காக ATM மையத்திற்கு அவர் சென்றுள்ளார். அப்போது தனது வங்கிக் கணக்கில் பணம் குறைவாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். எனவே அவர் வங்கிக் கணக்கை சோதனை செய்து பார்த்த போது, அதில் இருந்த 8 இலட்சத்து 7 ஆயிரத்து 600 ரூபாய் பணம் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

மேலும், அந்த லிங்கை கிளிக் செய்த பிறகே, தனது வங்கியில் இருந்த பணம் போனதை அறிந்த நடராஜன், இதுகுறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையிடம் புகாரளித்தார். இவர் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பல முறை எச்சரித்தும் ஒருசிலர் இதுபோன்று அறியாமையால் பணத்தை இழப்பதாக போலீசார் கூறுகின்றனர். 

மேலும், இது போன்று லிங்கை கிளிக் செய்ய சொல்லி குறுஞ்செய்தி ஏதேனும் வந்தால், உடனே அதை செய்து விட வேண்டாம். அரசு சம்பந்தப்பட்ட எதுவானாலும், அதன் அதிகாரபூர்வ இணையத்தை தொடர்பு கொண்டோ அல்லது நேரடியாக சென்றோ பார்க்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 


newstm.in
 

Similar News