அதிமுக கணக்குகளை முடக்குங்க.. ரிசர்வ் வங்கிக்கு ஓபிஎஸ் கடிதம்..!

அதிமுக கணக்குகளை முடக்குங்க.. ரிசர்வ் வங்கிக்கு ஓபிஎஸ் கடிதம்..!

Update: 2022-07-24 20:55 GMT

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானார். அவர், கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.

இதையடுத்து, கட்சியின் புதிய பொருளாளராக முன்னாள் அமைச்சர் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், ‘கட்சியின் வங்கிக் கணக்குகளை அவர்தான் கவனிப்பார்’ என, இம்மாதம் 12-ம் தேதி அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கி மேலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பினார்.

அதேநேரம், அதை ஏற்கக் கூடாது என ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பினார். எடப்பாடி பழனிசாமி சார்பில் வழங்கப்பட்ட ஆவணங்களை சரி பார்த்த வங்கி நிர்வாகம், எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில், “அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும்.

அதிமுக தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் வரை நான் தான் அதிமுக பொருளாளர்.

பொதுக்குழு குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் வரை கரூர் வைஸ்யா, எஸ்பிஐ, இந்தியன் வங்கி உள்ளிட்ட 7 வங்கிக் கணக்குகளில் பணப்பரிவர்த்தனையை நிறுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Similar News