திரைப்பட பாணியில் தங்கம் கடத்திய இளம்பெண் கைது!!
திரைப்பட பாணியில் தங்கம் கடத்திய இளம்பெண் கைது!!
இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் காலணிகளில் தங்கக்கட்டிகளை கடத்தி வந்த இளம்பெண்ணை சுங்கத்துறையினா் கைது செய்தனர்.
இலங்கையில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை வந்த 142 பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து சந்தேகப்பட்டவா்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த (24) இளம்பெண் ஒருவர் அந்த விமானத்தில் வந்திருந்தார். அவர் தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு கிரீன் சேனல் வழியாக அவசர அவசரமாக வெளியே சென்று கொண்டிருந்தார்.
அப்போது இளம் பெண்ணின் நடத்தை சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை மீண்டும் உள்ளே அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அந்தப் பெண்ணின் உடமைகளை சோதனையிட்டனர். ஆனால் எதுவும் இல்லை.
ஆனாலும் சந்தேகம் தீராமல் பெண் சுங்கத்துறை அதிகாரிகள் அவரை முழுமையாக சோதித்த போது, அவர் அணிந்திருந்த காலணிகள் வித்தியாசமாக இருந்தது. அதை ஆய்வுசெய்ததில், அதில் 14 சிறு சிறு தங்க கட்டிகளை அந்த காலனியில் ஒட்டி வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.
அந்த 14 தங்க கட்டிகளின் மொத்த எடை 393 கிராம். அதன் மதிப்பு ரூ.18.84 லட்சம். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த தங்க கட்டிகளைப் பறிமுதல் செய்தனர். அதோடு இளம்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in