பட்டாசு வெடித்து சிதறியதில் சிறுமி உயிரிழப்பு.. தந்தை கைது !!

பட்டாசு வெடித்து சிதறியதில் சிறுமி உயிரிழப்பு.. தந்தை கைது !!

Update: 2022-03-15 17:41 GMT

பட்டாசு வெடித்து சிதறியதில் சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள ஆறுதெங்கன்விளை என்ற பகுதியில் ராஜன் (40) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கூலித் தொழிலாளியான இவர் தனது வீட்டில் பட்டாசு தயாரிக்கும் தொழிலையும் நடத்தி வருகிறார். ராஜன் தனது மனைவி பார்வதி, மகள்கள் தேன்மொழி(13),வர்ஷா (10) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். அவர்கள் வீட்டில் முயல்களும் வளர்த்து வருகின்றனர்.

சிறுமிகளான தேன்மொழி 8ஆம் வகுப்பும், வர்ஷா 5ஆம் வகுப்பும் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். தற்போது திருவிழா காலம் தொடங்க உள்ளதால், ராஜன் பட்டாசு தயாரிப்பதற்காக வெடிமருந்தை வாங்கி தனது வீட்டின் தனி அறையில் வைத்திருந்தார். 

இந்த நிலையில், நேற்று இரவு முயல்களுக்கு உணவு வைப்பதற்காக சிறுமி வர்ஷா வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது தனி அறையில் இருந்த பட்டாசு வெடிமருந்து திடீரென வெடித்து சிதறியது. வெடிமருந்து வெடித்ததில் அந்த அறை இடிந்து விழுந்தது. சிறுமி வர்ஷாவும் உடல் சிதறி தூக்கி வீசப்பட்டு பலியானார். அவரது தாயார் பார்வதிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராஜாக்கமங்கலம் போலீசார் விரைந்து வந்து வர்ஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் ராஜன் வெடி பொருட்களை வீட்டில் பட்டாசு தயாரிப்பதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ராஜனை கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்.

newstm.in

Similar News