கோவா, உத்தராகண்டில் இன்று தேர்தல்! உ.பி.யில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு!!

கோவா, உத்தராகண்டில் இன்று தேர்தல்! உ.பி.யில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு!!

Update: 2022-02-14 06:00 GMT

கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு 55 தொகுதிகளில் நடைபெறுகிறது.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

உத்தராகண்ட்டில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

உத்தராகண்டின் ருத்ரபூர் பொது கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா பெருந்தொற்று காலத்தில், மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்கி, மத்திய அரசு உதவி செய்ததாக கூறினார். அச்சமயத்தில் உத்தராகண்டில் காங்கிரஸ் அரசு இருந்திருந்தால், பெருமளவில் ஊழல் நடைபெற்றிருக்கும் எனவும் அவர் கூறினார்.

கதிமா பகுதியில் பரப்புரை மேற்கொண்ட பிரியங்கா காந்தி, மக்களின் வளர்ச்சிக்காக பணியாற்றுவதே அரசியல் தலைவர்களின் கடமை என்றார். ஆனால் உத்தராகண்ட் முதலமைச்சர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் சுய வளர்ச்சிக்கான பணிகளை மட்டுமே செய்வதாக குற்றம்சாட்டினார்.

நாட்டில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கோவாவில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகனுக்கு கோவாவில் பாஜக சீட் தராததால் இந்த தேர்தல் அங்கு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

newstm.in

Similar News