உள்ளாடைக்குள் வைத்து தங்கம் கடத்தல்… ஆத்திரத்தால் சிக்கிய பயணி!!

உள்ளாடைக்குள் வைத்து தங்கம் கடத்தல்… ஆத்திரத்தால் சிக்கிய பயணி!!

Update: 2022-04-06 10:19 GMT

துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.40.08 லட்சம் மதிப்புடைய 840 கிராம் தங்கப்பசையை சுங்கத்துறை பறிமுதல் செய்தனர்.

துபாயில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்க துறையினர் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த 32 வயது ஆண் பயணி ஒருவர் தன்னிடம் சுங்கத் தீர்வை செலுத்துவதற்கான பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு, அவசரமாக வெளியில் சென்று கொண்டிருந்தார்.

சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர், நான் அவசரமாக செல்ல வேண்டும். என்னிடம் சுங்கத்தீா்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டேனே என்று ஆத்திரத்துடன் கேட்டார்.

இதனை அடுத்து அந்த பயணியை சுங்க அலுவலகத்திற்குள் அழைத்து வந்து, அவருடைய உடமைகளை சோதனையிட்டனர். அதில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாக சோதனையிட்டனர்.

அப்போது அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 2 பார்சல்களை கண்டுபிடித்தனர். அதை பிரித்து பார்த்த போது அதனுள் 840 கிராம் தங்கப்பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 40 லட்சம் என தெரியவந்தது.

இதையடுத்து சுங்கத்துறையினா் தங்கப்பசையை பறிமுதல் செய்தனர். அதோடு தங்கப்பசையை கடத்தி வந்த சென்னை பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Similar News