குட் நியூஸ்.. இவர்களுக்கும் நல வாரியம்.. அரசாணை வெளியிட்டது அரசு..!
குட் நியூஸ்.. இவர்களுக்கும் நல வாரியம்.. அரசாணை வெளியிட்டது அரசு..!
கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ‘தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு நடைபெற்ற மானியக் கோரிக்கையின் போது, “அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நல வாரியங்கள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்குவதை போல், கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும்” என்று சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் என அறிவித்தார்.
அதன் அடிப்படையில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் தோராயமாக குறைந்தது 500 முதல் 1,000 நபர்களுக்கு அதிகமான திருச்சபை ஊழியர்களும், இதர பணியாளர்களும் திருச்சபை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷ பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறிஸ்தவ அனாதை இல்லங்கள், அபலையர் நிலையங்கள், மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு இல்லங்கள், தொழுநோயாளி மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் ஆகியோருக்கு முறையான மாதாந்திர ஊதியம் இல்லாமல் தேவாலயத்திற்கு வரும் அங்கத்தினரிடம் இருந்து பெறப்படும் நன்கொடை தொகையிலிருந்து மட்டுமே சிறு தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
இவர்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்து, உபதேசியாளர்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைத்து உத்தரவிடப்படுவதாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.