கிரெடிட் கார்டு பயனர்களுக்கு குட் நியூஸ்.. ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு..!
கிரெடிட் கார்டு பயனர்களுக்கு குட் நியூஸ்.. ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு..!
யுபிஐ தளத்துடன் கிரெடிட் கார்டுகளையும் இணைத்துக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம், யுபிஐ பயனர்கள் ரூபே கிரெடிட் கார்டுகளில் இருந்து, யுபிஐ மூலம் பணம் செலுத்திக் கொள்ள முடியும்.
இன்று நடந்த இந்திய ரிசர்வ் வங்கி கூட்டத்தில், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், கிரெடிட் கார்டு தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.
அந்த அறிவிப்பில், “எளிதான பணப்பரிமாற்றதிற்காக இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களால் தற்போது யுபிஐ சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கூகுள் பே, போன் பே போன்ற பல செயலிகள் மூலம் சுலபமாக யுபிஐ ஐடி அல்லது ‘க்யூஆர் கோடு’ மூலம் மக்கள் பணம் பரிமாற்றம் செய்து வருகின்றனர்.
ஆனால், யுபிஐ சேவைகள் இதுவரையில் டெபிட் கார்டுகள் மூலம் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளை இணைத்து பயன்படுத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில், இனி கிரெடிட் கார்டுகளையும் இணைத்து யுபிஐ சேவைகளை பெறலாம். முதற்கட்டமாக, ரூபே (Rupay) கிரெடிட் கார்டுகளை இணைத்து பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், இனி வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டுகளை ஸ்வைப் செய்யாமலே பணப்பரிமாற்றம் செய்யலாம். அதற்கான நடைமுறைகள் முழுவதுமாக முடிக்கப்பட்ட பின்னர் இந்த சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.