பக்தர்களுக்கு நற்செய்தி.. ஏப்ரல் 1 முதல் இவர்களுக்கு சிறப்பு தரிசன சலுகை..!

பக்தர்களுக்கு நற்செய்தி.. ஏப்ரல் 1 முதல் இவர்களுக்கு சிறப்பு தரிசன சலுகை..!

Update: 2022-03-30 12:50 GMT

கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வரும் நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விதிக்கப்பட்டு இருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு தரிசன சலுகை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயது குழந்தையுடன் வரும் பெற்றோர் சிறப்பு தரிசனம் மூலம் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

கொரோனா பரவல் காரணமாக இந்த சலுகைகள் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஏழுமலையானை தரிசிக்க மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள் மீண்டும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து, திங்கள் முதல் வியாழன் வரையும், சனிக்கிழமை காலை 10 மணிக்கு கோவிலுக்கு தெற்கு மாட வீதியில் உள்ள சிறப்பு வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மாலை 3 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். தினந்தோறும் 1000 பக்தர்கள் இந்த சிறப்பு தரிசனத்தில் அனுமதிக்கப்பட உள்ளனர்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Similar News