விவசாயிகளுக்கு நற்செய்தி.. ஹெக்டேருக்கு 20,000 ரூபாய்.. முதல்வர் அறிவிப்பு..!

விவசாயிகளுக்கு நற்செய்தி.. ஹெக்டேருக்கு 20,000 ரூபாய்.. முதல்வர் அறிவிப்பு..!

Update: 2022-03-04 17:00 GMT

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.7 கோடி நிவாரணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஆண்டு, வழக்கத்தைவிட அதிகமாக வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக, புதுச்சேரி, காரைக்கால் பகுதி வயல்களில் தண்ணீர் புகுந்து நெல் உள்ளிட்ட பயிர்கள் மூழ்கி சேதமடைந்தன.

இதுகுறித்து அரசு தரப்பில் கணக்கெடுப்பு நடத்தியதில் சுமார் 4 ஆயிரம் ஹெக்டேர் அளவுக்கு பயிர்கள் சேதம் ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அப்போது நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.


இது தொடர்பாக மத்திய பார்வையாளர்கள் வந்து மழையால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனாலும், மழை நிவாரணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது, விவசாயிகளுக்கான மழை நிவாரண தொகையை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் ரங்கசாமியின் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘கடந்த 2021 - 2022-ம் ஆண்டு வடகிழக்கு பருவ மழையின்போது  பாதிக்கப்பட்ட விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்களுக்கான நிவாரணத்தொகை ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் அறிவித்தபடி விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை ரூ.7 கோடியே 10 லட்சத்து 57 ஆயிரத்து 600 நிவாரணத் தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பயனடைவார்கள். கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நிவாரணத் தொகை புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த 6 ஆயிரத்து 54 விவசாயிகளுக்கு ரூ.5 கோடியே 97 லட்சத்து 11 ஆயிரத்து 200 ஒதுக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 731 விவசாயிகளுக்கு 97 லட்சத்து 55 ஆயிரத்து 800 ரூபாயும், ஏனாம் பகுதியைச் சேர்ந்த 231 விவசாயிகளுக்கு 15 லட்சத்து 90 ஆயிரத்து 600 ரூபாயும் விரைவில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 7 ஆயிரம் விவசாயிகள் பயனடைவார்கள்’ என அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News