கால்நடை வளர்ப்போருக்கு குட் நியூஸ்.. 75% மானிய விலையில் தீவனம்..!
கால்நடை வளர்ப்போருக்கு குட் நியூஸ்.. 75% மானிய விலையில் தீவனம்..!
புதுச்சேரியில், கால்நடை வளர்ப்போருக்கு கடந்த காலங்களில் மானிய விலையில் தீவனம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த திட்டம் நிறுத்தப்பட்டது. தற்போது, மீண்டும் மானிய விலையில் தீவனம் வழங்கும் திட்டத்தை தொடர முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, புதுச்சேரி அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை மூலம் சண்முகாபுரம் மத்திய சமையல்கூட வளாகத்தில் நேற்று இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். இதில், முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு, மாடு வளர்ப்போருக்கு கால்நடை தீவனங்களை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின்படி 75 சதவீத மானியத்தில் கால்நடை தீவனம் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில், இப்போது பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான தீவனம் வழங்கப்படுகிறது.
இதில் ரூ.1 கோடியே 27 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பில் 615 டன் கால்நடை தீவனம் 4 ஆயிரத்து 100 கால்நடைகளுக்கு வழங்கப்பட உள்ளது. அதன்படி 3 ஆயிரத்து 32 பொதுப்பிரிவினரும், 1,068 அட்டவணை பிரிவினரும் பயனடைவர்.
மேலும், ரூ.22 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பில் 104.40 டன் கன்று தீவனம் 696 கன்றுகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதில் 486 பொதுப்பிரிவினரும், 210 அட்டவணை பிரிவினரும் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.