மாணவிகளுக்கு குட் நியூஸ்.. விண்ணப்பிக்க புதிய இணையதளம்.. தமிழக அரசு அறிவிப்பு..!

மாணவிகளுக்கு குட் நியூஸ்.. விண்ணப்பிக்க புதிய இணையதளம்.. தமிழக அரசு அறிவிப்பு..!

Update: 2022-06-28 16:32 GMT

தமிழகத்தில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து விவரம் பெற கட்டணமில்லா தொலைபேசி எண்ணும், விண்ணப்பிக்க பிரத்தியேக இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சான்றிதழ் படிப்பு, பட்டயம், பட்டம், தொழிற்கல்வி ஆகியவை படிக்கும் மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த உதவித் தொகையை பெற அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்திருக்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயின்று, அதன் பிறகு 9 முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளும் இந்த நிதி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

இதையடுத்து, 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு முடித்த பிறகு முதல் முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே திட்டம் பொருந்தும்.

அதாவது ஐடிஐ, ஆசிரியர் பட்டய படிப்பு, ஏபி, பிஎஸ்சி, பி.காம், பிபிஏ, பிசிஏ உள்ளிட்ட அனைத்து கலை மற்றும் அறிவியல், கவின் கலைக் கல்லூரி பாடங்கள், பிஇ, பி.டெக், எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்சி, இளங்கலை, கால்நடை அறிவியல், சட்டம், இணை மருத்துவ படிப்புகள் ஆகிய படிப்புகளுக்கு மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

ஆனால், இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு, தொலைதூர கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது.

நடப்பு கல்வியாண்டில் மாணவிகள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பிறகு இணையதளம் மூலம் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

அதுமட்டுமில்லாமல் முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் மாணவியரும் விண்ணப்பிக்கலாம்.

தொழில் மற்றும் மருத்துவப் படிப்புகளில் இறுதியாண்டு செல்லும் மாணவிகளும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ் இளநிலை படிப்பு பயிலும் மாணவிகள் மட்டுமே பயன் அடைய முடியும்.

இந்தத் திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பெறலாம். மேலும், இந்த திட்டத்திற்கு penkalvi.tn.gov.in என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்துகொள்ளலாம்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News