விவசாயிகளுக்கு நற்செய்தி.. வெளியானது அரசாணை..!

விவசாயிகளுக்கு நற்செய்தி.. வெளியானது அரசாணை..!

Update: 2022-07-09 10:22 GMT

தமிழகத்தில், ஏரிகளிலும் குளங்களிலும் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்தி மண் வளத்தை உயர்த்துவதற்கான கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவிப்பு வெளியிட்டார்.

அதை செயல்படுத்தும் விதமாக, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், ‘சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் ஏரி மற்றும் குளங்களில் இருந்து விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்து, விவசாய நிலங்களின் மேம்பாட்டிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.


நஞ்சை நிலங்களின் மேம்பாட்டிற்காக ஹெக்டேர் ஒன்றுக்கு 185 கன மீட்டர் வண்டல் மண்ணும், புஞ்சை நிலங்களின் மேம்பாட்டிற்காக ஹெக்டேர் ஒன்றுக்கு 222 கன மீட்டர் வண்டல் மண்ணும், ஏரி மற்றும் குளங்களில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று விவசாயிகள் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்.

இதற்கு, சம்பந்தப்பட்ட வேளாண் நிலங்களுக்கான 10(1) சிட்டா அல்லது அடங்கல் நகல் உடன் மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.

20 நாட்களுக்கு மிகாமல், ஏரி மற்றும் குளங்களில் இருந்து நிர்ணயித்த அளவில் வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களில் பயன்படுத்துவதற்கு மாவட்ட கலெக்டரால் அனுமதி வழங்கப்படும். இதற்கு, சுற்றுச்சூழல் துறையின் சான்றிதழ் பெறத் தேவையில்லை.

விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களில் பயன்படுத்துவதற்காக, விதி 12(2)-ன்கீழ் அனுமதி வழங்குமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உரிய அறிவுரைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், ஏரி மற்றும் குளங்களில் இருந்து இலவசமாக வண்டல் மண் எடுத்து, அதனைப் பயன்படுத்தி விவசாய நிலங்களின் மேம்பாடு மற்றும் திறனை அதிகரிக்கும் பொருட்டு, வேளாண் பெரு மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News