மதுரை மக்களுக்கு நற்செய்தி.. தமுக்கத்தில் அரசு பொருட்காட்சி..!

மதுரை மக்களுக்கு நற்செய்தி.. தமுக்கத்தில் அரசு பொருட்காட்சி..!

Update: 2022-04-20 13:35 GMT

மதுரை தமுக்கம் மைதானத்தில் இம்மாதம் இறுதியில் அரசு பொருட்காட்சி ஆரம்பமாக உள்ளது. இதற்கு அரங்கம் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளது.

மதுரையின் பிரபலமான தமுக்கம் மைதானம் சுமார் 7 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த மைதானத்தில், ராணி மங்கம்மாள் காலத்தில் கட்டப்பட்ட கலையரங்கை அகற்றி விட்டு சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணி நடைபெறுவதால், பொருட்காட்சிக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது.

இந்நிலையில், கலையரங்கம் போக மீதியுள்ள 5 ஏக்கர் நிலம் தற்போது காலியாக உள்ளது. இந்த காலி மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பொருட்காட்சியில் அனைத்து அரசு துறையின் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் குறித்து அரங்குகள் அமைக்கப்படும்.

மேலும், பொழுது போக்குவதற்கு கேளிக்கை விளையாட்டு, ராட்டினம், விளையாட்டு, வீட்டு பொருட்கள் விற்பனை என பல்வேறு அரங்கங்கள் அமைக்கப்படவுள்ளது. தனியார் அமைக்கும் அரங்கிற்கு சென்னையில் ஏலம் விடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, மதுரை தமுக்கம் மைதானத்தில் பொருட்காட்சி அமைப்பதற்கான அரங்குகள் அமைக்கும் பணி, இன்னும் ஓரிரு நாளில் துவங்க உள்ளது. அதனைத்தொடர்ந்து, இம்மாதம் இறுதியில் பொருட்காட்சி ஆரம்பமாகி, தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறவுள்ளன.

Similar News