பயணிகளுக்கு குட் நியூஸ்.. தமிழ் புத்தாண்டு விடுமுறைக்கு சிறப்பு ரயில்..!
பயணிகளுக்கு குட் நியூஸ்.. தமிழ் புத்தாண்டு விடுமுறைக்கு சிறப்பு ரயில்..!
தமிழ் புத்தாண்டு விடுமுறைக்காக தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மதுரை கோட்ட தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழ் புத்தாண்டு விடுமுறை காலத்தில் பயணிகளின் வசதிக்காக தாம்பரம் - நாகர்கோவில் இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, தாம்பரம் - நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் ஏப்ரல் 13ம் தேதி (புதன்கிழமை) இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு மதுரை வந்து சேரும். பின்னர், மதுரையில் இருந்து அதிகாலை 5.40 மணிக்கு புறப்பட்டு, காலை 10.55 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.
மறுமார்க்கத்தில், நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல் 17ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு, இரவு 9 மணிக்கு மதுரை வந்து சேரும். பின்னர், மதுரையில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 13 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 காப்பாளர் பெட்டியுடன் இணைந்த மாற்றுத்திறனாளிகள் பெட்டிகள் இணைக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.