மாணவர்களை ஏற்ற மறுத்த அரசுப் பேருந்து.. சிறை பிடித்து போராடிய பொதுமக்கள்..!
மாணவர்களை ஏற்ற மறுத்த அரசுப் பேருந்து.. சிறை பிடித்து போராடிய பொதுமக்கள்..!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜவ்வாது மலையில் 30-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆலங்காயம் மற்றும் வாணியம்பாடியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.
ஆனால், இந்த பகுதி வழியாக செல்லும் அரசு பேருந்துகள் மாணவர்களை ஏற்றிச் செல்வதில்லை. இதனால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
ஆலங்காயம் - ஜமுனாமரத்தூர் சாலையை மறித்து அவர்கள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து அறிந்த ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, இந்த பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.