வாரம் ஒரு நாள் அரசு ஊழியர்கள் வேட்டி அணிய வேண்டும் - சகாயம் ஐஏஎஸ்..!!
வாரம் ஒரு நாள் அரசு ஊழியர்கள் வேட்டி அணிய வேண்டும் - சகாயம் ஐஏஎஸ்..!!
உலகளவில் மிகப்பெரிய மக்களாட்சி நாடாக இந்தியா சிறந்து விளங்கக்காரணம்; வேற்றுமையில் ஒற்றுமைகாணும் இந்திய மக்களின் மனப்பான்மையேயாகும். இந்தியாவில் மொழியும், கலாச்சாரமும், பழக்கவழக்கங்களும், விருந்தோம்பல் முறைகளும் மிகச்சிறப்பாகப் பின்பற்றப்படுகின்றன. அதன்படி தமிழ்நாட்டில் பாரம்பரியமான வேஷ்டி சேலை உடையை மக்கள் அணிகின்றனர். தமிழர்களின் கலாசாரம் இதுதான்.
இந்த நிலையில் தமிழ்நாடு மக்களை பாரம்பரிய உடைகளை அணிய வைப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அரசு ஊழியர்கள் அனைவரும் வாரத்தில் ஒருநாள் கட்டாயம் வேஷ்டி, சேலை அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சிறப்பு விருந்திராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், கோ ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனராக இருந்த 2014 கால கட்டத்தில், ஜனவரி 6-ம் தேதி வேட்டி தினமாக அரசு அறிவித்தது, தமிழ்நாடு முழுவதும் தமிழர்களின் கலாச்சார உடையான வேட்டி, சேலை அணிய வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், கல்லூரி மாணவர்களிடம் இதனை கொண்டு சேர்க்க பல்கலைக்கழகத்திற்கு கடிதம் எழுதினேன்.
அப்போது 20-க்கும் மேற்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் பாரம்பரிய உடையான வேட்டியை அணிந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளும் நம் பாரம்பரிய உடையை அணிந்து வந்து பெருமை படுத்தினார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய நெசவாளர்களின் வாழ்விற்கு உதவக்கூடிய வகையில் அரசு ஊழியர்கள் வாரத்திற்கு ஒரு நாள் நமது பாரம்பரிய உடைகள் அணிந்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.