ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த தமிழக அரசு..!!

ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த தமிழக அரசு..!!

Update: 2022-06-05 04:40 GMT

பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி மதுரை மாவட்டம் விளாங்குடி பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் 3 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த நிலையில்,  திடீரென மண்சரிவு ஏற்பட்டு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்ற தொழிலாளி சிக்கிக் கொண்டார். 20 அடி ஆழத்தில் கீழே விழுந்த சதீஷ் மீது மணல் மூடப்பட்ட நிலையில் சதீஷை ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்க சக பணியாளர்கள் ஈடுபட்டபோது அவரின் தலை துண்டிக்கப்பட்டது. 

இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு  துறையினர் சதீஷின் உடலை,  நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்வபம் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஏசிசிபிஎல்  ஒப்பந்த நிறுவன உரிமையாளர் சுந்தரபாண்டியன், மேலாளர் பாலு, பணியிட பொறியாளர் சிக்கந்தர், ஓட்டுநர் சுரேஷ் குமார் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், மேலாளர் பாலு, பணியிட பொறியாளர் சிக்கந்தர், பொக்லைன் ஓட்டுனர் சுரேஷ் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், மண்சரிவு ஏற்பட்டு உயிரிழந்த தொழிலாளி சதீஷ் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மாவட்டம் விளாங்குடி கிராமம் ராமமூர்த்தி நகர் மெயின் வீதியில், மாநகராட்சி சார்பில் நடைபெற்று வந்த குடிநீர் குழாய் அமைக்கும் பணியின் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மண்சரிவினால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வீரணன் என்ற சதீஷ் (34) என்பவர் உயிரிழந்தார். இந்த தகவலை கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.

உயிரிழந்தவரின் மனைவி தேவி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்த சதீஷ் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க உத்திரவிட்டுள்ளேன். அதோடு தமிழ்நாடு அமைப்பு சாரா கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய நிதியத்திலிருந்தும் ரூ.5 லட்சம் வழங்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

Similar News