வரும் நவ.1-ம் தேதி ‘உள்ளாட்சிகள் தினம்’ - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!!
வரும் நவ.1-ம் தேதி ‘உள்ளாட்சிகள் தினம்’ - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!!
ஏப்ரல் 22-ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ், ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதியன்று உள்ளாட்சிகள் தினம் கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதில், உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டில் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத் தன்மையினை ஏற்படுத்திடவும், உள்ளாட்சி அமைப்புகளின் சாதனைகள் மற்றும் திட்டச் செயலாக்கங்கள் குறித்து தகவல், கல்வி மற்றும் தொடர்பு இயக்கங்கள் நடத்திட ஏதுவாக, 2007 நவம்பர், 1-ம் நாள் அன்று உள்ளாட்சி தினமாகக் கொண்டாடப்பட்டது. இறுதியாக 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியில் கொண்டாடப்பட்டு, அதற்குப் பிறகு அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது.
கிராமப்புற மக்களிடையே திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்திடவும், மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கவும், இடையில் நடத்தப்படாமல் போன இந்த நிகழ்வு, மக்கள் இயக்கமாக மீண்டும் நவம்பர் 1-ம் தேதி, “உள்ளாட்சிகள் தினமாக”கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, 2022-ம் ஆண்டு முதல் மீண்டும் நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சிகள் தினமாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.