அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ‘ஆப்பு’.. அடித்தது சென்னை ஐகோர்ட்..!
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ‘ஆப்பு’.. அடித்தது சென்னை ஐகோர்ட்..!
தஞ்சையை சோ்ந்த ராதா என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “நானும், எனது கணவரும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறோம்.
தமிழக அரசு 2021-ம் ஆண்டு வெளியிட்ட ஆணையில், ‘ஒரு குடும்பத்தில் கணவனும், மனைவியும் அரசுப் பணியில் இருந்து, இருவரில் யாராவது ஒருவர் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிகமாக சென்று பணியாற்றினால், அவருக்கு பணி மாறுதல் வழங்கி அருகில் பணியாற்ற முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான், வசிக்கும் இடத்தில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஈச்சம் கோட்டையில் பணியாற்றி வருகிறேன். அரசு ஆணைப்படி எனக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனுமில்லை. எனவே, எனக்கு பணி மாறுதல் வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், மனுதாரா் குறிப்பிடும் பள்ளிக்கு செல்லும் தூரம் 18 கிலோ மீட்டர் மட்டுமே எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, மனுதாரருக்கு அரசு விதிகளின் படி பணி மாறுதல் வழங்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தொடர்ந்து நீதிபதி, ஆசிரியர்களின் இதுபோன்ற நடவடிக்கைகளால் அரசின் நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. கல்விக்காக அரசு அதிக நிதி செலவிட்டாலும், அரசுப் பள்ளிகளில் கல்வித்தரம் மேம்படவில்லை.
உலக அளவில் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் உயர்ந்தும், தரமானதாகவும் உள்ளது. தனியார் பள்ளிகளில் கூட குறைந்த செலவில் தரமான கல்வி வழங்கப்படுகிறது.
ஆசிரியர்களுக்கு போதுமான ஊதியத்தை அரசு வழங்குகிறது. ஆனாலும், ஆசிரியர்கள், பகுதி நேரமாக மாணவர்களுக்கு டியூசன் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபடுவதில் கவனம் செலுத்துகின்றனர்.
ஆசிரியா் பணி என்பது உன்னதமானது. நாட்டின் எதிர்காலமாக மாணவர்கள் உள்ளனர். ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றவில்லை என்றால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வேறு தொழில்களில் ஈடுபடுவது விதிகளின்படி குற்றமாகும்.
எனவே, மாநிலம் முழுவதும் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள், வேறு தொழிலில் ஈடுபடுவது குறித்து குழுக்கள் மூலம் கண்காணித்து தகவல் சேகரிக்க வேண்டும்.
இதில், வேறு தொழில்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.