இவர்களுக்கு மட்டுமே அரசுப் பணி.. அரசாணை வெளியிட அன்புமணி வேண்டுகோள்..!

இவர்களுக்கு மட்டுமே அரசுப் பணி.. அரசாணை வெளியிட அன்புமணி வேண்டுகோள்..!

Update: 2022-07-19 16:26 GMT

தமிழர்களுக்கு மட்டுமே அரசுப் பணி என்ற நிலையை உருவாக்க தேவையான அரசாணைகளை உடனடியாக சம்பந்தப்பட்ட துறைகள் வெளியிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு 1,060 பணியிடங்களை நிரப்ப 2 ஆயிரத்து 148 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட நிலையில், அவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் குஜராத், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

அவர்களில், குறைந்தது 50 பேருக்காவது விரிவுரையாளர் பணி கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதன்மூலம், தமிழகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு கிடைக்கவிருந்த ஆசிரியர் பணி பறிக்கப்படுகிறது.

ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள இதர தேர்வு முகமைகளை பொறுத்தவரை, கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வை நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் சம்பந்தப்பட்ட துறைகளால் வெளியிடப்படும் என்று கடந்த டிசம்பர் மாதமே அறிவிக்கப்பட்டது.

ஆனால், அதன்பின் 8 மாதங்களாகியும் அதற்கான அரசாணைகள் பிறப்பிக்கப்படவில்லை. இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல், தமிழர்களுக்கு மட்டுமே அரசுப் பணி என்ற நிலையை உருவாக்க தேவையான அரசாணைகளை உடனடியாக சம்பந்தப்பட்ட துறைகள் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

Similar News