இலவச ரேஷன் திட்டம் - செப்டம்பர் மாதம் வரை நீட்டித்து அரசு நடவடிக்கை !!
இலவச ரேஷன் திட்டம் - செப்டம்பர் மாதம் வரை நீட்டித்து அரசு நடவடிக்கை !!
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா பெருந்தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக இரண்டாவது அலையில் பெரும் பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்பட்டது. வடமாநிலங்களில் மருத்துவ கட்டமைப்புகளை வெளிச்சம்போட்டு காட்டியது. ஊரடங்கு மற்றும் நோயின் தாக்கம் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.
இதனால் பொருளாதார நெருக்கடி, வருவாயின்மை ஆகியவற்றால் மக்கள் அவதிப்பட்டனர். இதன்காரணமாக கோடிக்கணக்கான மக்களைப் பாதுகாக்கும் வகையில் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.
இத்திட்டத்தின் மூலம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கிடைக்கும் உணவு தானியத்துடன், ஒரு வீட்டுக்கு ஒரு மாதத்திற்கு கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் கிடைக்கப்பெறும். இதனால் ஊரடங்கு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து பயன்பெற்று வருகின்றனர். கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்தபோதும் இத்திட்டம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
கடந்த ஆண்டு நவம்பரில் அடுத்த 4 மாதங்களுக்கு திட்டம் நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, 2022, மார்ச் வரை இது அமலில் இருக்கும். இந்நிலையில், பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தினை அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டித்து பிரதமர் உத்தரவிட்டு உள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் வரை நீடிக்கப்பட்டுள்ள இலவச ரேசன் திட்டத்துக்காக 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in