புதுக்கோட்டை மாவட்டத்தில் வசித்து வருபவர் அலமேலு (101). இவருக்கு 4 மகன்களும் 1 மகளும் 9 பேரக்குழந்தைகளும் 7 கொள்ளு பேரக்குழந்தைகளும் உள்ளனர். ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு தன்னுடைய வேலைகளை தானே செய்து ஆரோக்கியத்துடன் உள்ள அலமேலு தனது 101-வது பிறந்தநாளை மகன்கள், மகள், பேரக்குழந்தைகள் மற்றும் கொள்ளு பேர குழந்தைகளுடன் கொண்டாடினார்.

மூதாட்டி அலமேலுவின் பிறந்தநாள் விழாவையொட்டி அவரது மகன்கள் மேடை அமைத்து நாதஸ்வரம் முழங்க 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பூஜை செய்யப்பட்ட நீரை 60 மற்றும் 80 வயதை கடந்தவர்கள் அவரது காலில் ஊற்றி ஆசீர்வாதம் பெற்றார்கள். 

மேலும் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏராளமான மக்கள் வந்திருந்து 101-வது பிறந்தநாள் கொண்டாடும் மூதாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்றார்கள். இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அனைவருக்கும் உணவுகள் வழங்கப்பட்டது.

இது குறித்து அவரது மகன் கூறுகையில், தன்னுடைய தாய் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு இன்று வரை தன்னுடைய வேலைகளை தானே பார்த்துக் கொள்கிறார். குறிப்பாக அவித்த உணவுகளை மட்டுமே விரும்பி உண்பார் என்று தெரிவித்தார். 

இதுகுறித்து அவரது பேரன் கூறுகையில், தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து விடும் எனது அப்பத்தா, யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தன்னுடைய வேலையை தானே செய்து கொள்வார். அதேபோல் எங்களிடம் அளவுக்கதிகமான அன்பை செலுத்துவார் என்று தெரிவித்தார்.