பெரும் சோகம்.. ஏசி வெடித்து விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி..!

பெரும் சோகம்.. ஏசி வெடித்து விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி..!

Update: 2022-04-08 17:20 GMT

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஹோஸ்பேட் தாலுகா மாரியம்மன ஹள்ளி  கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட் பிரஷாந்த் (42). இவருடைய மனைவி சந்திரகலா (38). இந்தத் தம்பதியின் மகன் அர்த்விக் (16). மகள் பிரேரனா (8). இவர்கள் ராகவேந்திரா ஷெட்டி என்பவரின் வீட்டில்  வசித்து வந்தனர்.

இந்நிலையில், இவர்கள் வசித்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ஏசி இன்று அதிகாலை திடீரென வெடித்தது. இதனால், வீடு முழுக்க தீ பற்றிக்கொண்டு கரும்புகை சூழ்ந்தது. இதைக் கண்ட வீட்டு உரிமையாளர் ராகவேந்திரா ஷெட்டி மற்றும் அவருடைய மனைவி ராஜஸ்ரீ ஆகியோர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.


ஆனால், வெங்கட் பிரஷாந்த், அவருடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் வெளியே வர முடியாமல் தீயில் சிக்கி உயிருடன் எரிந்து பலியாகினர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு ஊழியர்கள் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு ஹோஸ்பேட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்துக்கான காரணம் ஏசி வெடித்ததில் விஷ வாயு கசிந்ததா அல்லது தீயால் ஏற்பட்ட புகையில் மூச்சுத் திணறி இறந்தார்களா என்பது குறித்து மரியம்மன ஹள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஏசி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கருகி பலியான சம்பவம் அப்பகுதியினரின் நெஞ்சை உலுக்கியது.

Similar News