பெரும் சோகம்.. டெம்போ மீது கார் மோதல்.. 8 பேர் பலி.. 6 பேர் படுகாயம்..!
பெரும் சோகம்.. டெம்போ மீது கார் மோதல்.. 8 பேர் பலி.. 6 பேர் படுகாயம்..!
உத்தரபிரதேசத்தில், வேகமாக வந்த கார் டெம்போ மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர்; படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டம் சிலொலி கிராமத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் என 15-க்கும் மேற்பட்டோர் ஒரு டெம்போவில் பாடியாலி பகுதியில் உள்ள ஆசிரமத்திற்கு சென்றனர்.
இன்று காலை, அவர்கள் அனைவரும் தங்கள் கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். படோன் - மெயின்புரி நெடுஞ்சாலையில் டெம்போ வந்தபோது, எதிரே வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் டெம்போ கவிழ்ந்தது. இந்த விபத்தில், டெம்போவில் பயணித்த 5 பெண்கள், 2 குழந்தைகள், காரில் பயணித்த ஒருவர் என மொத்தம் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர், இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 6 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.