பெரும் சோகம்.. செல்ஃபி எடுத்தபோது ஒகேனக்கல் ஆற்றில் விழுந்து பெண் பலி !
பெரும் சோகம்.. செல்ஃபி எடுத்தபோது ஒகேனக்கல் ஆற்றில் விழுந்து பெண் பலி !
ஒகேனக்கலில் 'செஃல்பி' எடுத்தபோது காவிரி ஆற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
தமிழகத்தின் பிரதான நீர்வீழ்ச்சியாகவும் சுற்றுலா தலமாகவும் இருப்பது ஒகேனக்கல் அருவிகள். காவிரி ஆற்றில் பாய்ந்தோடும் தண்ணீர் அங்கு விரிந்து விழுவதை காண கண்கோடி வேண்டும். தற்போது நீர் வரத்து காணப்படுவதாலும் கோடை விடுமுறை என்பதாலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (40), சுமதி (35) தம்பதி தங்களது 8 வயது பெண் குழந்தையுடன் ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். ஒகேனக்கலில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த பின்னர் பரிசலில் பயணித்து காவிரி ஆற்றின் அழகை ரசித்துள்ளனர்.
பின்னர் ‘ஐவர் பாணி’ என்று அழைக்கப்படும் ஐந்தருவி அருகே காட்சிக் கோபுரம் அமைந்துள்ள பகுதியில் பரிசலில் இருந்து பாறைகளில் இறங்கி நின்று ஆழமான பகுதியில் பயணிக்கும் காவிரி ஆற்றை அவர்கள் வேடிக்கை பார்த்துள்ளனர். அப்போது, பாறை ஒன்றின் ஓரப்பகுதிக்கு சென்ற சுமதி தனது செல்போன் மூலம் ‘செஃல்பி’ எடுக்க முயன்றுள்ளார்.
இதில் எதிர்பாராத விதமாக சுமதி ஆற்றில் தவறி விழுந்துள்ளார். இதைக் கண்டதும் அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆற்றில் குதித்து சுமதியை மீட்டுள்ளனர். எனினும் உயரமான பகுதியில் இருந்து விழுந்ததால் சுமதிக்கு பலத்த அடிபட்டு அப்போது மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே அவரை ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலையில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், செல்லும் வழியிலேயே சுமதி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஒகேனக்கல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆபத்தை உணராமல் செஃல்பி எடுத்த பெண் தவறிவிழுந்து உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
newstm.in