குற்றச்செயலில் ஈடுபடும் காவலர்கள்! மீண்டும் ஒரு சம்பவம்!!
குற்றச்செயலில் ஈடுபடும் காவலர்கள்! மீண்டும் ஒரு சம்பவம்!!
குற்றச் சம்பவத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருடி விற்பனை செய்த காவலர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மெரினா காவல் நிலையத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த ஜெயச்சந்திரன், குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் ஆகியிருந்தார். அதன் பின்பு மீண்டும் பணியில் சேர்ந்து காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வந்தார்.
மெரினா காவல் நிலையத்தில் பணியாற்றிய ஒரு மாதத்தில் மீண்டும் குடிக்க ஆரம்பித்துள்ளார். அதன் காரணமாக அவரது மனைவி தேன்மொழியுடன் தகராறு ஏற்பட்டது. இதனால் வெறுப்படைந்த அவரது மனைவி மயிலாப்பூர் காவல் குடியிருப்பு வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்தார்.
மனைவி உயிரிழந்ததை கூட பொருட்படுத்தாமல் மீண்டும் குடிக்க ஆரம்பித்த ஜெயச்சந்திரன், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் குற்ற சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்தை திருடி விற்க திட்டமிட்டார்.
இதையடுத்து காவல் நிலையத்தில் இருந்து வாகனத்தை திருடி, மயிலாப்பூர் காவல் நிலைய காவலர் என்று கூறி மெக்கானிக் கபிலன் என்பவரிடம் விற்றுத் தருமாறு கூறி உள்ளார். உடந்தையாக அருள்பிரகாஷ் மற்றும் நாகராஜ் ஆகியோரும் இணைந்து வாகன திருட்டில் ஈடுபட்டனர்.
சந்தேகமடைந்த மெக்கானிக் கபிலன் இது தொடர்பாக மயிலாப்பூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். அதனடிப்படையில் காவலர் ஜெயச்சந்திரன் மற்றும் அவருக்கு துணையாக இருந்த அருள் பிரகாஷ், நாகராஜ் ஆகிய 3 பேரையும் மயிலாப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
newstm.in