மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறை.. கவர்னரிடம் மனு..!

மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறை.. கவர்னரிடம் மனு..!

Update: 2022-06-10 17:59 GMT

புதுச்சேரி மாநில மாணவர் - பெற்றோர் நலச் சங்க தலைவர் வை.பாலா, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த மனுவில், “2022 - 2023-ம் கல்வியாண்டுக்கான முதுநிலை மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 17-ம் தேதி இளநிலை மருத்துவம், பல் மருத்துவப் படிப்பிற்கான தேசிய நுழைவுத் தேர்வை மத்திய தேர்வாணையம் நடத்த உள்ளது. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளிவர உள்ளது.

இந்த நிலையில் சென்டாக் நிர்வாகம், புதுச்சேரி அரசு மற்றும் புதுவை சுகாதாரத்துறை முறைப்படுத்தி 2022 - 2023-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என மாணவர்கள் சார்பாக புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறேன்.

இரட்டை குடியுரிமை பெற்று குறுக்கு வழியில் அரசு ஒதுக்கீடு உயர் படிப்பிற்கான இடங்கள் பெறுவதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும். அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு தமிழகத்தை போல் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மருத்துவப் படிப்பில் இறுதிக்கட்ட கலந்தாய்வுக்கு முன்பு நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள முதுநிலை, இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்களை நிரப்பும் போது , புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

அதேபோல், உயர்கல்வி கல்விக் கட்டணக் குழு கட்டணங்களை நிர்ணயிக்கும் முன் உச்ச நீதிமன்ற விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.

மத்திய மருத்துவ கமிட்டி மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப விதிமுறைகளை பின்பற்றி கல்விக் கட்டணங்களை நிர்ணயிக்க ஆவன செய்ய வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

Similar News