காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ஹர்திக் படேல்..!
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ஹர்திக் படேல்..!
குஜராத் மாநிலத்திலுள்ள ஒபிசி சமூகங்களுள் ஒன்றான பட்டிதார் சமூகத்தைச் சேர்ந்தவர் ஹர்திக் படேல். 2012-ம் ஆண்ட ‘சர்தார் படேல் குழு’ என்ற அமைப்பில் இணைந்த இவர், குறுகியகாலத்தில் குர்மி, பட்டிதார் உள்ளிட்ட படேல் சமூக இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். 2015-ம் ஆண்டு இந்த அமைப்பில் இருந்து வெளியேறிய இவர், ஓ.பி.சி மக்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக மிகப்பெரிய பேரணியையும், போராட்டத்தையும் முன்னெடுத்தார்.
இதையடுத்து, 2017 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்தார். அதன்பின் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது. சில நாட்களாக காங்கிரஸ் மேலிடம் மீது அதிருப்தியில் இருந்து வந்த ஹர்திக் படேல், சில நாட்களுக்கு முன்னர், ட்விட்டர் பக்கத்தில் இருந்த காங்கிரஸ் செயல் தலைவர் என்ற தன் சுய விபரத்தை நீக்கினார். இதனால், அவர் காங்கிரசில் இருந்து விலகப்போகிறாரா என்ற சந்தேகங்கள் எழுந்தன.
இந்நிலையில், இன்று காங்கிரசில் இருந்து அனைத்து பொறுப்புகளையும் ஹர்திக் படேல் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், காங்கிரஸ் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்து விலகி உள்ளேன். இதனை சக நிர்வாகிகள் மற்றும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன். எதிர்காலத்தில் மாநிலத்தின் நலனுக்காக உழைக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
விரைவில் குஜராத் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஹர்திக் படேல், காங்கிரசில் இருந்து விலகியது அக்கட்சிக்கு பின்னடைவாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.