அமைச்சரின் உதவியாளர் வீட்டில் குவியலாக பணம் பறிமுதல் !!
அமைச்சரின் உதவியாளர் வீட்டில் குவியலாக பணம் பறிமுதல் !!;
மேற்கு வங்கத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாநில பள்ளி பணிகள் ஆணைய பரிந்துரையின் அடிப்படையில் ஆசிரியா்கள் மற்றும் குரூப் சி, டி ஊழியா்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இதில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக புகாா் எழுந்தது. இதுகுறித்து அம்மாநில உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறை தனியாக விசாரிக்கிறது.
இந்த முறைகேடு நடந்ததாக கூறப்படும் காலகட்டத்தில் கல்வித்துறை அமைச்சராக இருந்தவா் பாா்த்தா சட்டா்ஜி, தற்போது தொழில் மற்றும் வா்த்தக துறை அமைச்சராக உள்ளார். இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்துக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
இதேபோல், கூச்பிகாரில் உள்ள கல்வித் துறை இணையமைச்சா் பரேஷ் அதிகாரி இல்லத்திலும், கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க தொடக்கக் கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவா் மாணிக் பட்டாச்சாா்யாவின் இல்லத்திலும் ஒரே நேரத்தில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா்.ஆசிரியா் நியமன முறைகேடு தொடா்பாக, பாா்த்தா சட்டா்ஜியிடம் கடந்த ஏப்ரல் 26, மே 18 ஆகிய தேதிகளில் சிபிஐ விசாரணை மேற்கொண்டிருந்தது.
அதேபோல், அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளரும், அவரது நெருங்கிய கூட்டாளியான அர்பிதா முகர்ஜி என்பவரது குடியிருப்பு வளாகத்தில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது அர்பிதா வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.500 மற்றும் 2000 ரூபாய் பணக்கட்டுக்களை அவர்கள் பறிமுதல் செய்தனர். அந்த பணம் மலை போல் குவிக்கப்பட்டிருந்தது. அவற்றை எண்ணுவதற்கு வங்கி ஊழியர்கள் உதவி நாடப்பட்டது. பணம் எண்ணும் எந்திரங்கள் மூலம் அந்த பணம் மொத்தம் 20 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டது.
அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆவணங்கள், பதிவுகள், சந்தேகத்திற்குரிய நிறுவனங்களின் விவரங்கள், மின்னணு சாதனங்கள், வெளிநாட்டு நாணயம் மற்றும் தங்கம் உள்ளிட்டவற்றையும் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகின.
இதனிடையே, பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அதன் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியது இந்த விசாரணையில் தொடர்புடையவர்களே என்றும் அவர் குறிப்பிடடுள்ளார்.
மேலும், அரசியல் எதிரிகளை பழிவாங்கும் மத்திய பாஜக அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாகவே, இச்சோதனைகள் நடந்துள்ளன. நீதிமன்ற உத்தரவுபடி இரு அமைச்சா்களும் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைத்து வருகின்றனா். அவா்களுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் அமலாக்கத் துறையை பாஜக அரசு பயன்படுத்துகிறது என்று அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சருமான பா்ஹத் ஹக்கிம் கூறினார்.
newstm.in