கோவை குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோவை குற்றால அருவி. இந்த சுற்றுலா தளம் வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளதால் இயற்கை அழகினையும், வனவிலங்குகளையும் கண்டு ரசிப்பதற்கும், அருவியில் குளிப்பதற்கும் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவது வழக்கம்.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், கோவை குற்றாலத்திற்கு அதிக அளவில் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவும், இன்று காலையும் வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பாறைகள் முழுவதும் மறைந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதன் காரணமாக, கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கும், அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வனத்துறையினர் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.