பின் சீட் நபருக்கும் ஹெல்மெட்.. முதல் நாளிலே 367 பேர் மீது வழக்குப் பதிவு..!
பின் சீட் நபருக்கும் ஹெல்மெட்.. முதல் நாளிலே 367 பேர் மீது வழக்குப் பதிவு..!
இருசக்கர வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கத்தில் சென்னையில் இன்று (23-ம் தேதி) முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது.
மேலும், இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.
அதன்படி, சென்னையில் இன்று முதல் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க 312 இடங்களில் போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் பின் இருக்கையில் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் சென்ற 367 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதைப்போல, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக இன்று மட்டும் 1278 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களிடம் போக்குவரத்து போலீசார் ரூ.100 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.