தமிழ்நாடு சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிக்கின்றனர். இதனிடையே, சட்டப்பேரவையில் 2022-23-ம் ஆண்டிற்கான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கைகள் நடைபெற்றது.

கேள்வி நேரத்தின்போது, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, ‘தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தனியாக கவுன்சிலிங் நடத்தி, மாணவர் சேர்க்கை நடத்தப்படுமா?’ என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த பேசிய அமைச்சர் பொன்முடி, “அரசு கல்லூரிகளில் கவுன்சிலிங் நடத்தலாமா? என்று கேட்கிறார். அந்தந்த கல்லூரிகளிலேயே, அங்கிருக்கின்ற பகுதி மாணவர்களே விண்ணப்பித்து, அவர்களுக்கு நேரடியாக, வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.

இதுவரை ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், வரும் கல்வியாண்டில் ( 2022-2023 ) நேரடியாக கலந்தாய்வை நடத்த உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகவும், மேலும் சென்னை தவிர மாநிலம் முழுவதும் 10 இடங்களில் பொறியியல் கலந்தாய்வை நேரடியாக நடத்துவது பற்றியும் தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த கவுன்சிலிங் என்பது அவ்வளவு சாதரணமானது கிடையாது. கவுன்சிலிங் என்றால் உடனே ஆன்லைனில் நடத்தலாம் என்பார்கள். ஆன்லைனில் நடத்துவதில் எவ்வளவு குளறுபடிகள் இருந்தது என்று சென்ற ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் பார்த்திருக்கிறோம்.

எனவே அது குறித்தெல்லாம் அரசு பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்கின்ற மாணவர்களுக்குக் கூட, அந்த கவுன்சிலிங்கை 10 இடங்களில் நடத்தி, அவர்களுக்கு நேர்முகமாக அவர்களைத் தேர்ந்தெடுக்க முடியுமா என்றெல்லாம் கூட ஆலோசனைகளையெல்லாம் இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது. எனவே கலைக்கல்லூரிகளில் காலியிடங்களுக்கு கவுன்சிலிங் நடத்துவது என்பது நிச்சயமாக நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று.” என்றார்.