ஹிஜாப் விவகாரம்.. பிரபல நடிகர் கைது..!
ஹிஜாப் விவகாரம்.. பிரபல நடிகர் கைது..!
கன்னட நடிகர் சேத்தன் குமார். சமூக ஆர்வலரான இவர் சமூக பிரச்னைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இவர் கடந்த 16-ம் தேதி, ஹிஜாப் விவகாரத்தில் நீதிபதி கிருஷ்ணா தீக்சித் கூறியது பற்றி அவதூறு கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்.
நீதிபதி குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது செய்யப்பட்டு உள்ளார். இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி சேத்தன் குமாருக்கு, பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் வாய்மொழி உத்தரவு பிறப்பித்து இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று மதியம் நடிகர் சேத்தன் குமாரின் மனைவி மேகா, பெங்களூரு சேஷாத்ரிபுரம் போலீஸ் நிலையம் முன்பு நின்று சேத்தன் குமாரின் முகநூல் பக்கத்தில் இருந்து ஒரு வீடியோ பேசி வெளியிட்டு இருந்தார்.
அந்த வீடியோவில், “நான் வெளியே சென்றிருந்தபோது போலீசார் எனது வீட்டிற்கு வந்து சேத்தன் குமாரையும், அவரது பாதுகாவலரையும் அழைத்துச் சென்றுள்ளனர். நான் சேத்தன் குமாரின் செல்போன் எண்ணுக்கு அழைத்தபோது, தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளதாக தகவல் வருகிறது.
நான் சேஷாத்ரிபுரம் போலீஸ் நிலையத்திற்கு வந்து கேட்டபோது, சேத்தன் குமாரை அழைத்து வரவில்லை என்று போலீசார் கூறுகின்றனர்.
அவர் கடத்தப்பட்டு இருப்பதாக நினைக்கிறேன்” என்று கூறி இருந்தார். இந்த வீடியோவை பார்த்த சேத்தன் குமாரின் ரசிகர்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், நீதிபதி கிருஷ்ணா தீக்சித் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதால் சேஷாத்ரிபுரம் போலீசார் தாமாக முன்வந்து சேத்தன் குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து இருப்பதாக போலீஸ் கமிஷனர் கமல்பந்த் விளக்கம் அளித்துள்ளார்.