மக்களை கவர்ந்த ஹிமாலயன் கரடி உயிரிழந்தது !
மக்களை கவர்ந்த ஹிமாலயன் கரடி உயிரிழந்தது !
வண்டலூா் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஹிமாலயன் கரடி உடல்நலக் குறைவால் உயிரிழந்தது.
சென்னையை அடுத்த வண்டலூரில் வனத்துறை கட்டுப்பாட்டில் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவில் சிங்கம், புலி, யானை, ஊா்வனவைகள், பறவைகள் என 2,500-க்கும் மேற்பட்ட வனவிலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஏராளமான அரியவகை விலங்குகளும் உள்ளன. இதனால் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் வந்து கண்டுரசித்து செல்கின்றனர்.
இந்த நிலையில், இப்பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஹிமாலயன் கரடி உடல்நலக் குறைவால் நேற்று (சனிக்கிழமை) உயிரிழந்தது. இதுகுறித்து பூங்கா நிா்வாகிகள் கூறுகையில், சுமாா் 24 வயதுடைய ஹிமாலயன் கரடி சா்க்கஸிலிருந்து மீட்டு, கடந்த 2004ஆம் ஆண்டு பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது. பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட போதே அதன் இரண்டு கண்களிலும் பாா்வை குறைபாடு இருந்தது.
மேலும் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த டிசம்பா் 7ஆம் தேதியில் இருந்து பூங்கா மருத்துவா்களால் கரடிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவ்வப்போது, கால்நடை பல்கலைக்கழக மருத்துவ குழுவினராலும் பாா்வையிடப்பட்டு ரத்த பரிசோதனை மற்றும் இதர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. எனினும் கடந்த இரண்டு நாள்களாக அதன் உடல்நிலை மிகவும் மோசமாக காணப்பட்டது. தீவிர சிகிக்சை அளித்தும் பலன் அளிக்காமல் அந்தக் கரடி உயிரிழந்தது.
இதனையடுத்து பிரேதப் பரிசோதனைக்குப் பின் பூங்கா வளாகத்தில் அந்தக் கரடியின் சடலம் புதைக்கப்பட்டது என்றனா். மக்களை கவர்ந்த ஹிமாலயன் கரடி உயிரிழந்தது பூங்கா நிர்வாகத்தினருக்கு மட்டுமல்லாமல், அதனை கண்டுரசித்து வந்த மக்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in