மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்... தக்காளி விலை கடும் வீழ்ச்சி..!!
மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்... தக்காளி விலை கடும் வீழ்ச்சி..!!
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் ஒட்டன்சத்திரம், தேனி, திண்டுக்கல், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது. தினசரி 75 லாரிகள் வரை தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம்.
கடந்த மே மாதம் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் பெய்த திடீர் கோடை மழையால் தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து பாதியாக குறைந்து விலை திடீரென பல மடங்கு அதிகரித்தது. உச்ச பட்சமாக சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.120-யை கடந்து விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளில் மீண்டும் வழக்கம் போல் உற்பத்தி தொடங்கி தக்காளியின் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில தினங்களாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால், தக்காளியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.13-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் மார்கெட்டில் உள்ள சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 20-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தக்காளி விலையின் வீழ்ச்சி இல்லத்தரசிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.