சொகுசு காரில் கஞ்சா கடத்திய பெண் போலீஸின் கணவர்!!

சொகுசு காரில் கஞ்சா கடத்திய பெண் போலீஸின் கணவர்!!

Update: 2022-05-23 06:45 GMT

மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 4.5 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தக்கலை, அழகியமண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் தனிப்படை போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த மகாராஷ்டிரா பதிவெண் கொண்ட சொகுசு காரை மடக்கி விசாரணை நடத்தினர்.

காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசிய நிலையில் காரை சோதனையிட்ட போது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கண்ட போலீஸார், அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் காரில் கஞ்சா கடத்தி வந்த நபர்கள் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த செல்வின் மற்றும் மனோஜ் என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

பளு தூக்கும் வீரரான செல்வின் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மும்பை சென்று அங்குள்ள ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது அங்கு வந்த மும்பையை சேர்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதோடு, அங்கேயே குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மனைவியின் மூலம் அங்குள்ள கஞ்சா விற்பனை கும்பலுடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் சப்-இன்ஸ்பெக்டரான மனைவியின் துணையுடன் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த தனது நண்பன் மனோஜ் உடன் கஞ்சா விற்பனை செய்து வந்தார்.

மும்பையில் இருந்து கஞ்சாவை மொத்தமாக கொள்முதல் செய்து காரில் கடத்தி வந்து வரும் போதே கேரளா உள்ளிட்ட இடங்களுக்கு சப்ளை செய்வதும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதும் தெரிய வந்தது.

தற்போது விற்பனைக்காக மும்பையில் இருந்து கொண்டு வரப்பட்ட கஞ்சாவை கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து விட்டு, நான்கரை கிலோ கஞ்சாவை குமரி மாவட்டத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததாகவும், அப்போது போலீஸாரிடம் சிக்கி கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.

இதனையடுத்து போலீஸார் அவர்களிடம் இருந்து நான்கரை கிலோ கஞ்சா, 36 ஆயிரம் ரூபாய் ரொக்கம், கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்ததோடு அவர்களை தக்கலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

newstm.in

Similar News