“கூண்டோடு டிரான்ஸ்ஃபர் பண்ணிடுவேன்” : காவல் ஆணையர் எச்சரிக்கை!!
“கூண்டோடு டிரான்ஸ்ஃபர் பண்ணிடுவேன்” : காவல் ஆணையர் எச்சரிக்கை!!
பொதுமக்கள் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத காவலர்களை தாம்பரம் காவல் ஆணையர் ரவி வாக்கி டாக்கி மூலம் எச்சரித்துள்ளார்.
தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பள்ளிக்கரணையில் கணவர் தாக்கியதில் காயம் அடைந்த மனைவி நான்கு முறை காவல் நிலையம் சென்று புகார் அளித்ததாக தெரிகிறது. ஆனால் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த தகவல் காவல் ஆணையருக்கு வரவே உடனடியாக பள்ளிக்கரணை போலீசாரை கூண்டோடு இடமாற்றம் செய்து விடுவேன் என்று தாம்பரம் காவல் ஆணையர் ரவி வாக்கி டாக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒழுங்காக பணி செய்யாமல் இருந்தால் கன்னியாகுமரி, திருநெல்வேலி போன்ற மாவட்டத்திற்கு தூக்கி அடித்து விடுவேன் என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் அவர் வாக்கிடாக்கியில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர் வரை தங்கள் பணியை தவிர வேறு ஏதேனும் வேலையை செய்திருந்தால் ஒட்டு மொத்தமாக தனுஷ்கோடிக்கு மாற்றி விடுவதாகவும் கடலலையை எண்ண வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பகிரங்கமாக அவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு முறை புகார் கொடுத்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியை அவர் வாக்கிடாக்கி மூலமாக கேட்டிருக்கிறார். மக்களை துன்புறுத்தும் நோக்கத்தில் தான் பணிக்கு சேர்ந்தீர்களா எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.
வேதனையோடு வரக்கூடிய மக்களிடம் புகாரை பெற்று அவர்களை மனநிறைவோடு அனுப்ப வேண்டும். என்னைப் பொறுத்தவரை வேலையை சரியாக பார்க்க வேண்டும். இல்லையென்றால் கூண்டோடு தூக்கி விடுவேன் என்று கூறியுள்ளார்.
newstm.in