ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிறை.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிறை.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

Update: 2022-04-01 16:22 GMT

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் விதிமீறல் கட்டடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமல் கடமை தவறியதாக தெய்வசிகாமணி என்ற அரசு அதிகாரியின் மூன்று ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வை சென்னை மாநகராட்சி நிறுத்தி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தெய்வசிகாமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில், 2013-ம் ஆண்டு, அவருக்கு எதிரான நடவடிக்கையை ரத்து செய்து, பணிப்பயன் மற்றும் பணப்பலன்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை மாநகராட்சி மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு வழக்கை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விசாரித்த நீதிபதிகள், பதவி உயர்வுக்கான பட்டியலில் தெய்வசிகாமணியின் பெயரை பரிசீலிக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த வழக்கு இன்று (1ம் தேதி) நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் முகமது ஷபிக் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தெய்வசிகாமணி தரப்பிலிருந்து, இடைக்கால உத்தரவுப்படி பதவி உயர்வுக்கு தனது பெயர் பரிசீலிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், ‘விதிமீறல் கட்டடங்கள் மீதான வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் கருத்தில் கொள்வதில்லை.

நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளின் செயலுக்கு அபராதம் விதிப்பது இரண்டாவது பட்சமாக இருக்க வேண்டும். சிறை தண்டனை விதிப்பது தான் பிரதானமாக இருக்க வேண்டும்.

அவர்களை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து, முக்கியத்துவம் இல்லாத பதவிகளில் தமிழக அரசு நியமிக்க வேண்டும். இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அவ்வாறு நடவடிக்கை எடுக்கும்போது ஐஏஎஸ் பதவியில் இருக்கக் கூடிய அதிகாரிகள் மட்டத்தில் இருந்து நடவடிக்கையை தொடங்க வேண்டும்.

மேல்முறையீடு விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் தனது பதவியை லஞ்சப் பணம் மூலம் வருமானம் ஈட்டக்கூடிய பதவியாக நினைப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.

இதுபோன்ற பதவிகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் சேர்த்த சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணை வரும் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Similar News