ஐபிஎல்- பூரன் அதிரடி வீண்.. பறக்கவிட்ட பாவெல்.. ஹைதராபாத்தை அமுக்கியது டெல்லி
ஐபிஎல்- பூரன் அதிரடி வீண்.. பறக்கவிட்ட பாவெல்.. ஹைதராபாத்தை அமுக்கியது டெல்லி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற ஹைதராபாத் பீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் கேப்டன் பந்த், வார்னர், பாவெல் ஹைதராபாத் வீரர்களின் பந்துவீச்சை சிதறடித்தனர். டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் அதிரடியாக ஆடி 92 ரன்களுடனும், பாவெல் 67 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். ஹைதராபாத் சார்பில் புவனேஸ்வர் குமார், சீன் அப்பாட், ஸ்ரேயாஸ் கோபால் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 7 ரன், கேப்டன் வில்லியம்சன் 4 ரன், ராகுல் திரிபாதி 22 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து இறங்கிய மார்கிராம், பூரன் ஜோடி அதிரடியாக ஆடியது. மார்கிராம் 25 பந்தில் 42 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து இறங்கிய ஷஷாங்க் 10 ரன்னில் வெளியேறினார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிகோலஸ் பூரன் அதிரடியில் மிரட்டி அரை சதம் கடந்து, 34 பந்துகளில் 6 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 62 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களே எடுத்தது. இதையடுத்து, டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பத்து போட்டிகளில் விளையாடிய டெல்லி அணிக்கு இது 5வது வெற்றி ஆகும்.
newstm.in