ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்காக ரஜத் படிதார் தனது திருமணத்தை தள்ளிபோட்டிருப்பது தெரியவந்துள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லக்னோவுக்கு எதிரான வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு அணி வீரர் ரஜத் படிதார் 54 பந்துகளில் 112 ரன்கள் (12 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி அனைவரது கவனத்தை ஈர்த்தார். ஒரே நாளில் ஹீரோ அந்தஸ்தை எட்டிவிட்ட 28 வயதான ரஜத் படிதார் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்.

இவரது சதத்தின் உதவியால் பெங்களூரு அணி வெற்றிபெற்று அடுத்தச்சுற்றுக்கு சென்றுள்ளது. ரஜத் படிதார் முதல்தர கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுகிறார். ஆனால், சர்வதேச கிரிக்கெட் அனுபவம் கிடையாது. பெங்களூரு அணியில் சிசோடியா காயமடைந்ததால் அவருக்கு பதிலாக மாற்று வீரராக ரூ.20 லட்சத்திற்கு ரஜத் படிதார் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இன்று ஹீரோ ஆகிவிட்டார்.

விராட் கோலி கூறுகையில், நான் எத்தனையோ சிறந்த இன்னிங்சை பார்த்து இருக்கிறேன். ஆனால் ரஜத் படிதாரின் இன்னிங்ஸ் ஏற்படுத்திய தாக்கம் போல் வேறு எதையும் உணர்ந்ததில்லை. நெருக்கடியான சூழல், மிகப்பெரிய போட்டி, அதுவும் சர்வதேச போட்டியில் ஆடாத ஒரு வீரர் சதம் அடித்திருப்பது பிரமிப்பானது. சக வீரராக அவரை பாராட்டியாக வேண்டும், என்றார்.

பெங்களூரு கேப்டன் பிளிஸ்சிஸ் கூறுகையில், ரஜத் படிதார் போன்ற ஒரு இளம் வீரர் இந்த நேரத்தில் சதம் அடிப்பது எளிதானது அல்ல. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நான் பார்த்த சிறந்த செஞ்சுரியில் இதுவும் ஒன்று, என்றார்.

இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்காக ரஜத் படிதார் தனது திருமணத்தை தள்ளிபோட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து அவரது தந்தை மனோகர் படிதார் கூறும் போது, ரஜத் படிதாருக்கு திருமணம் செய்து வைக்க ரத்லம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை தேர்வு செய்திருந்தோம். படிதாரை ஐ.பி.எல். ஏலத்தில் யாரும் எடுக்காததால் மே 9ஆம் தேதி திருமணத்தை நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டோம்.

ஆனால் அதற்குள் பெங்களூரு அணி அவரை ஒப்பந்தம் செய்ததால் திருமணத்தை தள்ளிவைத்து விட்டோம். ஐ.பி.எல். முடிந்ததும் ரஜத் படிதார் ரஞ்சி கிரிக்கெட்டில் மத்திய பிரதேச அணிக்காக விளையாட உள்ளார். இந்த போட்டி முடிந்ததும் அவரது திருமணம் நடைபெறும், என்றார். 

newstm.in

Tags: