கைது செய்தால் உடலை வாங்குவோம்.. மாணவனின் தாய் கண்ணீர் மல்க பேட்டி..!
கைது செய்தால் உடலை வாங்குவோம்.. மாணவனின் தாய் கண்ணீர் மல்க பேட்டி..!
சென்னை வளசரவாக்கம் ஆழ்வார்திருநகரில் இன்று காலை பள்ளி வேன் மோதி 2-ம் வகுப்பு படித்து வந்த தீக்சித் என்ற 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் வேன் ஓட்டுநர், பேருந்திலிருந்து மாணவர்களை இறங்கிவிடும் பெண் ஊழியர் ஞானசக்தியையும் வளசரவாக்கம் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையில், இறந்த 2-ம் வகுப்பு மாணவனின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உயிரிழந்த மாணவனின் தாய் ஜெனிபர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் எனது ஒரே மகனை பறிகொடுத்துள்ளேன்.
பள்ளி நிர்வாகிகளை கைது செய்தால்தான் என் மகனின் உடலை வாங்குவோம். காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு குழந்தையை அனுப்பினேன். 8.40 மணிக்கு, என் மகனுக்கு விபத்து ஏற்பட்டதாக பள்ளியிலிருந்து கூறினார்கள்.
மருத்துவமனைக்கு சென்று குழந்தையை பார்க்கையில் வாய், மூக்கு, உடல் முழுக்க ரத்தமாக இருந்தது. என்ன நடந்தது என்று பள்ளி தரப்பில் இதுவரை ஒருவர் கூட சொல்லவில்லை.
உணவு கூடையை விட்டு சென்றதாகவும், தவறி விழுந்ததாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால் என் குழந்தையின் வயிற்றில் பள்ளி வாகனம் ஏறி இறங்கி உள்ளது” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.