பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!
பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த மாதம் 20-ம் தேதி வெளியிட்டார். அதில், 12-ம் வகுப்பில் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.36 சதவீதம் அதிகமாக தேர்ச்சிபெற்றுள்ளனர்.
அதேபோல் 10-ம் வகுப்பில் 90.7 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதனையடுத்து,12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவா்கள் மற்றும் தனித் தேர்வா்களுக்கு ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரையிலும், 10-ம் வகுப்புக்கு ஆகஸ்ட் 2 முதல் 8-ம் தேதி வரையிலும் துணைத் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வரும் 25-ம் தேதி முதல் துணைத் தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அவரவர் பயின்ற பள்ளிகளில் மாலை நேர சிறப்பு வகுப்புகளை நடத்தி தேர்வில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.