கொரோனா பரவல் அதிகரிப்பு.. பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்..!

கொரோனா பரவல் அதிகரிப்பு.. பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்..!

Update: 2022-06-05 05:30 GMT

மகாராஷ்டிராவில் கொரோனா 3வது அலை ஓய்ந்த நிலையில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். ஆனால், கடந்த மாதம் முதல் தொற்று மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது.

இதில் கடந்த மாதம் 26-ம் தேதி தினசரி பாதிப்பு 500-க்கும் கூடுதலாக பதிவானது. அதன்பிறகு படிப்படியாக உயர்ந்து, நேற்று (3-ம் தேதி) ஆயிரத்தை கடந்துள்ளது.

அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, தொற்று பாதிப்பு நேற்று 1,134 ஆக உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி 24-ம் தேதிக்கு பிறகு அதிக பாதிப்பு இதுவாகும்.

தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று முன்தினம் 1,045 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் நேற்று தொற்று பாதிப்பு 1,134 ஆக உயர்ந்துள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு, மகாராஷ்டிரா அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, திறந்தவெளி தவிர்த்து பிற பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவித்துள்ளது.

இது குறித்து கூடுதல் முதன்மை செயலரான டாக்டர் பிரதீப் வியாஸ், அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் எழுதியுள்ள கடிதம் வழியே பல உத்தரவுகளை வழங்கியுள்ளார்.

அதில், ரயில்கள், பேருந்துகள், திரையரங்குகள், ஆடிட்டோரியங்கள், அலுவலகங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட மூடப்பட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணிவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News