இலங்கையில் இடைக்கால அரசு.. அனைத்து கட்சித்தலைவர்களுடன் நாளை ஆலோசனை..!
இலங்கையில் இடைக்கால அரசு.. அனைத்து கட்சித்தலைவர்களுடன் நாளை ஆலோசனை..!
இலங்கையில், பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
ஆனால், ராஜினாமா செய்ய வலியுறுத்தும் போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து வரும் அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இருவரும் ஆட்சியில் தொடர்ந்து நீடித்து வருகின்றனர்.
அதேநேரம், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண உலக வங்கி மற்றும் சர்வதேச நாடுகளிடம் இருந்து கடன் பெறும் முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
அத்துடன், தங்களுக்கு எதிரான அரசியல் நெருக்கடி மற்றும் பொதுமக்கள் போராட்டத்திற்கு தீர்வு காணவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இலங்கையில் அனைத்துக் கட்சிகளும் இணைந்த இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக அனைத்துக் கட்சிகளுக்கும், சுயேச்சை எம்பிக்களுக்கும் கடிதம் எழுதியுள்ள அவர், அனைத்துக் கட்சி அரசு அமைக்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் கொண்ட கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நாடு தற்போது எதிர்கொண்டு வரும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்துக் கட்சி அரசுக்கு கொள்கை அளவில் ஒப்புக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
இந்த அனைத்துக் கட்சி அரசின் வடிவம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை விவாதித்து முடிவு எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ள கோத்தபய ராஜபக்சே, நாளை (29-ம் தேதி) நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.