விரைவில் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு இணையதள சேவை..!!
விரைவில் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு இணையதள சேவை..!!
தமிழ்நாட்டில் 34,777 ரேஷன் கடைகள் உள்ளன. இதன் மூலம் கோதுமை, அரிசி, சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மத்திய, மாநில அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், ‘பி.எம்.வாணி’ திட்டத்தின் கீழ், பொது இடங்களில் வைஃபை சேவை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளில் பொது தரவு மையம் ஏற்படுத்தி, இணையதள சேவை வழங்கப்பட உள்ளது.
இதற்காக ரேஷன் கடைகளை பொது தரவு மையமாக மாற்ற வாய்ப்புள்ளதா என்று ஆராய்ந்து அறிக்கை தருமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு கடந்த மே மாதம், கூட்டுறவு துறை சுற்றறிக்கை அனுப்பியது. அதன் அடிப்படையில், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, ரேஷன் கடைகளில், வைஃபை வசதி ஏற்படுத்தி, அந்த கடைக்கு அருகில் வசிபவர்களுக்கு இணையதள சேவை வழங்கப்பட உள்ளது. இதை பயன்படுத்த விரும்புவோர் மொபைல் போன், லேப்டாப் எடுத்து வந்து இணையதள சேவைகளை பயன்படுத்தலாம். இணையதள சேவை பயன்படுத்துவோர், குறிப்பிட்ட தொகையை ரேஷன் கடைகளுக்கு கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதனால், ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு வருவாய் கிடைக்கும். அதிக இட வசதியுடன் சொந்த கட்டடங்களில் செயல்படும் ரேஷன் கடைகளில், இத்திட்டத்தை செயல்படுத்த கூட்டுறவுத் துறை தயராகி வருகிறது.