ஒரு பெண்ணுக்கு நாப்கின் முக்கியமா, அல்லது வைரம் முக்கியமா..?: திமுக எம்பி கேள்வி..!

ஒரு பெண்ணுக்கு நாப்கின் முக்கியமா, அல்லது வைரம் முக்கியமா..?: திமுக எம்பி கேள்வி..!

Update: 2022-02-09 16:13 GMT

நாடாளுமன்றத்தில், மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 1-ம் தேதி 2022-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், வைரத்திற்கான சுங்க வரி 7.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கிரிப்டோ கரன்சிக்கு 30 சதவீதம் வரி வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், இன்று (9ம் தேதி) காலை மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா பேசியதாவது: “கிரிப்டோ கரன்சி தற்போது சட்டப்பூர்வமானது கிடையாது.

மத்திய அரசால் 30 சதவீதம் வரி வசூலிக்கும் பட்சத்தில் சட்டப்பூர்வமானதாக மாறிவிடும். போதைப் பொருட்கள் விற்பனைக்கு வரி வசூலிப்பது போன்றதுதான் இது. உலகில் எந்த நாட்டிலும் இதுபோன்ற நடைமுறை இல்லை.

எந்த பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டாலும், அது சட்டத்தின் கீழ் தான் வரும். முதல் முறையாக சட்டத்தின் அடிப்படையில் இல்லாத ஒரு கிரிப்டோ கரன்சிக்கு வரி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் சானிடரி நாப்கினுக்கு 12 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால், வைரத்திற்கான சுங்க வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு பெண்ணுக்கு நாப்கின் முக்கியமா, அல்லது வைரம் முக்கியமா..? நம் நாட்டில் உள்ள கோடிக்கான பெண்களுக்கு நாப்கின் தேவைப்படுகிறது. ஆனால், பல பெண்களால் ஒரு பாக்கெட்கூட வாங்க முடிவதில்லை” என்றார்.

Similar News