வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்படுகிறதா ஆதார் கார்டு? மீண்டும் பரிந்துரை அனுப்பிவைப்பு !!
வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்படுகிறதா ஆதார் கார்டு? மீண்டும் பரிந்துரை அனுப்பிவைப்பு !!
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு, ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட முடியும் உள்ளிட்ட புதிய சட்ட விதிமுறைகள் தொடர்பான சட்ட திருத்த அறிவிப்பை வெளியிடுமாறு மத்திய அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் பதவியேற்றதும் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரைகளை அனுப்பினார். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் இடம்பெற்றன. அதுகுறித்து அரசு இன்னும் முடிவெடுக்காத நிலையில், மீண்டும் பரிந்துரைகளை தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.
இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றம் கொண்டு வருவதற்குத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதற்கு ஏற்றார்போல, வாக்காளர்களின் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
இதன்படி, ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாலும், இது கட்டாயமாக்கப்படாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வாக்காளர்களில் வெவ்வேறு முகவரிகளில் வசிப்பவர்கள் தங்களின் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைப்பதன் மூலம் முறைகேடுகள் களையப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக கடந்தாண்டு டிசம்பரில் தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டது.
மேலும் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறியிருப்பதாவது, தேர்தல் நன்கொடை படிவத்தில் திருத்தம் செய்ய வேண்டும். அரசியல் கட்சிகளின் பதிவு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 29(அ) விதிகளின் கீழ் வருகிறது. இருப்பினும், அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்வதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. எனவே, அந்த சட்டத்திலும் திருத்தம் செய்ய வேண்டும். வாக்குப்பதிவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகளை தடைசெய்யும் முன்மொழிவுகளை மறுஆய்வு செய்யவும், வேட்பாளர் போட்டியிடக்கூடிய இடங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் வேண்டும்.
ஒரு வேட்பாளர் ஒரு இடத்தில் மட்டுமே போட்டியிட அனுமதிக்கும் வகையில் விதிகள் வகுக்க வேண்டும் என்று ஆணையம் கூறியுள்ளது. எனவே வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான அறிவிப்பை வெளியிடுமாறு மத்திய சட்ட அமைச்சகத்திடம் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கேட்டுக் கொண்டுள்ளார். அதனால், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான அறிவிப்பை ஒன்றிய அரசு விரைவில் வெளியிடும்’ என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
newstm.in